| ADDED : பிப் 04, 2024 05:37 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் கல்லல் போலீசாரின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்ததால் மனைவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தவறு செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.காரைக்குடி அருகே கல்லலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தாட்கோவில் கடன் பெற்று ஆட்டோ வாங்கினார். கல்லல் போலீசில் சில அலுவலர்களின் முறைகேடு, இரட்டை கொலை வழக்கு குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். அவரை பழிவாங்கும் உள்நோக்கில் போலீசாரில் சிலர் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் 2011ல் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அதற்கு எதிராக திருநாவுக்கரசு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் இறந்தார். அவருக்கு பதிலாக மனைவி வசந்திசேர்த்துக் கொள்ளப்பட்டார்.நீதிபதி பி.புகழேந்தி: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் 2011 ல் ஆட்டோவை ஆய்வு செய்தபோது, தகுதி சான்றிதழை மனுதாரர் வழங்கவில்லை. இதனால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பதற்காக கல்லல் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதலுக்கான 'மெமோ'மனுதாரருக்கு வழங்கப்பட்டது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்வழக்கு 2022ல் விசாரணைக்கு வந்தபோது,' அது திருட்டு வாகனம். அசல் ஆர்.சி., புத்தகம், பிற ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பித்தால், வாகனம் விடுவிக்கப்படும்,' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றம்,'அசல் ஆவணங்களை சமர்ப்பித்து, உரிய கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் வாகனத்தை விடுவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.கட்டணம் செலுத்தி, அசல் ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பித்தார். காரைக்குடி மண்டல போக்குவரத்து அலுவலர் அதை சரிபார்த்து வாகனத்தை விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். மனுதாரர் போலீசாரை அணுகியபோது, வாகனத்தை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.பின்,'நல்ல நிலையில் இருந்த வாகனம் பழுதடைந்துவிட்டதால் அதை மனுதாரர் திரும்பப் பெற மறுக்கிறார்,' என்ற நிலைப்பாட்டை போலீசார் எடுத்தனர். உண்மையைக் கண்டறிய, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர், 'கல்லல் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வாகனம் மனுதாரரிடமிருந்து கைப்பற்றப்பட்டது அல்ல,' என அறிக்கை சமர்ப்பித்தார்.இதற்கு சம்பந்தப்பட்ட போலீசாரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அவர்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தி, மனுதாரரின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.துன்புறுத்தல் மற்றும் மன வேதனையில் வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில், கணவர் இறந்ததாக மனைவி தரப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட போலீசாரின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் அன்றி வேறில்லை. மனுதாரருக்கும் அவரது கணவருக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளனர்.மனுதாரரின் வாகனம் இல்லாததால் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. போலீசாரின் துன்புறுத்தலுக்கு மனுதாரர் ஆளானதால் அவரது மனைவி ரூ.2 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு. அத்தொகையை எஸ்.பி., வழங்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட போலீசாரிடமிருந்து வசூலிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.