அண்ணா பல்கலை பணி நியமன வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: சென்னை அண்ணா பல்கலை பணி நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருச்சி கார்த்திக் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர், நுாலகர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு 2020 ல் வெளியானது. அது சட்டவிரோதமானது. ரத்து செய்ய வேண்டும். பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறைகளை பின்பற்றி மறு அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. பல்கலை தரப்பில் வழக்கறிஞர் ஜான் ராஜதுரை, தமிழக உயர்கல்வித்துறை தரப்பில் அரசு பிளீடர் திலக்குமார், ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசன், யு.ஜி.சி., தரப்பில் வழக்கறிஞர் அழகுராம் ஜோதி ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பணி நியமனம் தொடர்பாக பொது நல வழக்கு தொடர முடியாது. மனுதாரரை பாதிக்கப்பட்ட தரப்பாக கருத முடியாது. பணி நியமன நடைமுறை நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுற்றிருக்கும். இக்காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.