மதுரை: ஒவ்வொரு மத நிகழ்விலும், மற்ற மதத்தினரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசுக்கு சொந்தமான மைதானத்தில் அன்னதானம் நடந்த அனுமதித்தது. பஞ்சம்பட்டி ராஜாமணி தாக்கல் செய்த மனு: பஞ்சம்பட்டியிலுள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நவ.3ல் (நாளை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலுக்கு அருகில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி கோரி ஆத்துார் தாசில்தாரிடம் மனு அளித்தேன். நிராகரித்தார். பஞ்சம்பட்டியிலிருந்து முன்னிலைக்கோட்டைக்கு செல்லும் பொது சாலையாக உள்ள மாற்று இடத்தை ஒதுக்கினார். நிராகரித்தது சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் விசாரித்தார். அரசு தரப்பு: மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நடத்த அனுமதித்தால், சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். வழக்கில் எதிர்மனுதாரர் சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பு: மைதானத்தின் ஒரு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு மேடை கட்டப்பட்டது. அது பாஸ்கா மேடை என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் பண்டிகையின் போது அம்மேடையில் நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு சுரேஷ் பெர்க்மன்ஸை பொறுத்தவரை, ஹிந்துக்களை மத நோக்கத்திற்காக மைதானத்தை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. 2017ல் சமாதான கூட்டம் நடந்தது. கடந்த 100 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட விழாக்களைத் தவிர வேறு எந்த விழாவையும் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது என்பதை அவரது தரப்பு சுட்டிக்காட்டியது. அவரது பதில் மனுவில் பாஸ்கா மேடைக்கு முன் உள்ள திறந்தவெளி ஊராட்சிக்கு சொந்தமானது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலம் அரசு தரப்பு,'பஞ்சம்பட்டியிலுள்ள நிலம் காலி இடம் / கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது அரசுக்கு சொந்தமானது,' என தெரிவித்தது. சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமாக இல்லாமல் அரசுக்கு சொந்தமாக இருக்கும்போது, அது மத அல்லது சமூக பின்னணியை பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும். கிறிஸ்தவ சமூகம் ஈஸ்டர் பண்டிகையின் போது நிலத்தை பயன்படுத்தி வருகிறது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு. நமது அரசியலமைப்பு 1950 ஜன.26 ல் அமலுக்கு வந்தது. அரசியலமைப்பு விதிகளுக்கு ஒத்துப்போகாத, அரசியலமைப்பிற்கு முன்னர் இருந்த ஏற்பாடுகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் அன்று மைதானத்தை பயன்படுத்தலாம்; ஆனால் ஹிந்துக்கள் அதே இடத்தில் அன்னதானம் நடத்த முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈஸ்டர் அன்று, ஹிந்துக்கள் அன்னதானம் அல்லது வேறு எந்த நிகழ்வையும் அதே மைதானத்தில் நடத்த விரும்புவதுபோல் இல்லை. கிறிஸ்தவர்களுக்கு அனுமதி ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடர்பாக, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கூறும் அளவிற்கு நான் செல்வேன். அந்த சந்தர்ப்பத்தில் மைதானத்தை பயன்படுத்த வேறு யாரும் அனுமதி கோரினால், மறுக்கப்பட வேண்டும். நவ.3 ல் மைதானத்தில் மனுதாரரை அன்னதானம் நடத்த அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுமா என எதிர்மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினேன். அரசு தரப்பில் எதிர்மறையாக பதிலளித்தாலும், சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பு வழக்கறிஞர் அமைதியாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று அவரால் கூற முடியவில்லை. அரசுக்கு சொந்தமான ஒரு பொது மைதானம், மக்கள் பொதுவாக பயன்படுத்த கிடைக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அதை பயன்படுத்துவதிலிருந்து விலக்கிவைக்க முடியாது. விலக்கி வைத்தால் அது அரசியலமைப்பிற்கு முரணானது. பைபிள் மையம் ஒரு பைபிள் படிப்பு மையம் அமைக்க முயன்றபோது எதிர்ப்பு எழுந்தது. அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமையை வெறும் ஆட்சேபனை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்னை அடிப்படையில் மறுக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்பதை உயர்நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது. பைபிள் படிப்பு மையத்தை நிறுவ பொருந்தும் விஷயம், கும்பாபிஷேகம் தொடர்பாக அன்னதான நிகழ்வை நடத்துவதற்கும் பொருந்தும். அன்னதானம் நடத்துவதை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமையின் எல்லைக்குள்கூட கொண்டு வர முடியும். ஏதேனும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதை உரிய முறையில் கையாள வேண்டும். அடிப்படை உரிமைகளை நசுக்கும் எளிதான வழிமுறையை போலீசார் தேர்ந்தெடுக்கக்கூடாது. வருந்தத்தக்கது மனுதாரரின் கிராமத்தில் 2500 கிறிஸ்தவ குடும்பங்கள், 400 ஹிந்து குடும்பங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களைவிட ஹிந்துக்கள் குறைவாக உள்ளனர். மைதானத்தில் அன்னதானம் நடத்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என போலீசார் கூறுவதாகத் தெரிகிறது. இது மிக வருந்தத்தக்க நிலை. ஒவ்வொரு மத நிகழ்விலும், மற்ற மதத்தினரும் பங்கேற்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ நண்பர் கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது, முதலில் அவரை நான் வாழ்த்த வேண்டும். ஒரு முஸ்லிம் நண்பர், நானும் உண்ணும் வகையில் நோன்பு (சைவம்) கஞ்சி மட்டுமே தயாரித்த சந்தர்ப்பத்தை நினைவு கூறுகிறேன். அதை நான் ரசித்தேன். நமது கலாசாரத்தின் அழகு இதுவாகும். இத்தகைய தொடர்புகள் மட்டுமே மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உறுதி செய்யும். அத்தகைய கலாசார, நாகரிக ஒற்றுமை நடைமுறையில் நிரூபிக்கப்படாவிட்டால், சமூகத்தில் அமைதி இருக்காது. அன்னதானம் நடத்த தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். சாலையில் மக்களை அமர வைத்து உணவு வழங்குவது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட மைதானம் அரசுக்கு சொந்தமானது; அந்த இடத்தில் நிகழ்வை நடத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படாது. மைதானத்தில் அன்னதானம் நடத்த மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது. மைதானம் ஒப்படைக்கப்பட்ட அதே நிலையில் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி அமைதியாக நடைபெறுவதை திண்டுக்கல் எஸ்.பி.,உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.