உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாஸ்மாக் கொள்முதல், விற்பனை இணையத்தில் வெளியிட வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

டாஸ்மாக் கொள்முதல், விற்பனை இணையத்தில் வெளியிட வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுபான கொள்முதல், விற்பனை விபரங்களை டாஸ்மாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 2003 முதல் சில்லரை விற்பனை கடைகள் மூலம் மதுபான விற்பனை செய்கிறது. அதற்கு தனி இணையதளம் உள்ளது. அதில் ஆண்டறிக்கை, மதுபான வினியோக நிறுவனங்கள், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, கலால் வரி, உரிமம், சிறப்புக் கட்டண விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தணிக்கை அறிக்கை, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் பரிந்துரைகள், சரக்கு கையிருப்பு, லாப, நஷ்டக்கணக்கின் அறிக்கை 2016--- ---17 வரை பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள், விற்பனை, அரசு வருவாய் விபரங்களை மக்கள் அறியலாம். 2017--18 முதல் 2024 --25 வரை ஆண்டறிக்கையை பதிவேற்றம் செய்யவில்லை.சில மதுபான நிறுவனங்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. பிற நிறுவன மதுபானத்தை விற்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில்,'நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப பாரபட்சமற்ற கொள்முதல் கொள்கையை ஏற்பது அவசியம். மது உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் ஆர்டர்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் சமமாக ஆர்டர்களை வழங்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.கேரளா மற்றும் கர்நாடகாவில் தினசரி, வாரம், மாதம், வருடாந்திர கொள்முதல் மற்றும் விற்பனை, தணிக்கை அறிக்கை முறையாக அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. 2017--18 முதல் 2024--25 வரை ஆண்டறிக்கை, மதுபானம் வினியோகிக்கும் நிறுவனங்கள், முகவரி, அதன் இயக்குனர்கள், ஒவ்வொரு நிறுவனத்திலும் எவ்வளவு கொள்முதல், கொள்முதல் விலை, வரி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, மாதாந்திர விற்பனை விபரங்களை டாஸ்மாக் நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தமிழக உள்துறை(மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை) கூடுதல் தலைமைச் செயலர், டாஸ்மாக் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்தவாரம் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி