சி.எஸ்.ஐ., நிர்வாகத்திடமிருந்து அரசு நிலத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மதுரை பசுமலையில் சட்ட விரோதமாக சி.எஸ்.ஐ., நிர்வாகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை மீட்க நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தேவசகாயம் தாக்கல் செய்த பொதுநல மனு: கிறிஸ்தவ சீர்திருத்த சங்க தலைவராக உள்ளேன். மதுரை திருப்பரங்குன்றம் பசுமலையில் 32 ஏக்கர் 96 சென்ட் நிலம் மற்றும் 2 ஏக்கர் 53 சென்ட் நிலத்தை 1857 ல் அமெரிக்கன் மிஷனரி போர்டு பெயரில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நிபந்தனையின் பேரில் அரசு வழங்கியது. சுதந்திரத்திற்கு பின் பல்வேறு மிஷனிரிகள் ஒருங்கிணைந்து தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.டி.ஏ.,) உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புது நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு அரசு நிலம் உரிமை மாற்றம் செய்யப்படும். அந்நிலத்தில் சி.எஸ்.ஐ., பசுமலை மேல்நிலை பள்ளி உள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக் காலம் 1956 ல் முடிந்துவிட்டது. அது ஒப்படை அல்லது இனாமாக வழங்கப்பட்ட நிலம் அல்ல. மிஷினரிகளுக்கு வழங்கிய நிலத்தை சி.எஸ்.ஐ.டி.ஏ., நிர்வாகிகளுக்கு உரிமை மாற்றம் செய்தது விதிமீறலாகும். குத்தகை நீட்டிப்பும் செய்யவில்லை. உண்மையை மறைத்து சி.எஸ்.ஐ.டி.ஏ., பெயரில் பட்டா மாறுதல் செய்து, போலி ஆவணம் மூலம் 11 ஏக்கர் நிலம் விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி பணிக்காக கொடுத்த நிலத்தில் வணிக வளாகம், சர்ச் அமைத்துள்ளனர். சி.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., மதுரை-ராமநாதபுரம் திருமண்டில நிர்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கக் கோரி தமிழக வருவாய்த்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராம்குமார் ஆஜரானார். நீதிபதிகள் வருவாய்த்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.