உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை பாண்டியராஜன். அவரது சகோதரர் பிரசாந்த். கஞ்சா பதுக்கிய வழக்கில் இருவருக்கும் ஏப்.24 ல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றம் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. ஆத்திரமடைந்த அவர்கள், நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தினர். அந்நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். பாண்டியராஜன், பிரசாந்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.சேலம் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவராக (ஜெ.எம்.,) இருந்த முத்துப்பாண்டி 2022 மார்ச்சில் நீதிபதியின் அறைக்குள் நுழைந்தபோது பிரகாஷ் என்பவரால் மார்பில் கத்தியால் குத்தப்பட்டார். கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வழக்கறிஞர் கண்ணன் 2024 நவம்பரில் அரிவாளால் தாக்கப்பட்டார். திருநெல்வேலி நீதிமன்றத்தில் 2024 டிசம்பரில் விசாரணைக்காக வந்த மாயாண்டியை சிலர் அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.சாட்சிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் மாநிலம் முழுவதும் குறைபாடுகள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.மாநில காவல்துறை, உள்துறைகளுடன் உயர்நீதிமன்றம் கலந்தாலோசித்து அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களுக்கும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். ஆயுதம் ஏந்திய போலீசாரை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். மெட்டல் டிடக்டர், ஸ்கேனர் சோதனை மூலம் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் 2023 ல் பிறப்பித்தது. அதை நிறைவேற்றவில்லை.அவ்வழிகாட்டுதல்படி மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், மதுரை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை