விதிமீறல் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : விதிகளை மீறி செயல்படும் சட்டவிரோத மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது விற்பனை செய்ய அரசியல் செல்வாக்குமிக்கவர்களுக்கு அரசே உரிமம் வழங்குகிறது.மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மது வினியோகிக்க கட்டுப்பாடுகள் விதித்து, மன்றங்களுக்கு உரிமம் வழங்கலாம். ஆனால் செல்வாக்குமிக்கவர்கள் சுயலாபத்திற்காக பெயரளவிலான துணை விதிகளை உருவாக்கி மனமகிழ் மன்றங்களை பதிவுத்துறையில் பதிவு செய்கின்றனர். மன்றங்களில் எவ்வித செயல்பாடுகளும் நடப்பதில்லை. அங்கு வருவோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவற்றில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்வதில்லை.விதிகள்படி மனமகிழ் மன்றங்கள் செயல்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் சட்டவிரோத மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள் தமிழக உள்துறை செயலர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், பதிவுத்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து டிச.10 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.