பட்டியலினத்தவருக்குவீடுகள் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து பய னின்றி காலியாக உள்ள இலவச வீட்டுமனைகளை அடையாளம் காண வேண்டும். தகுதியானவர்களுக்கு ஒதுக்கீடு செய்து ரூ.5 லட்சத்தில் வீடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடற்ற பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய இலவச வீட்டுமனைகள் பல ஆண்டுகளாக பயனின்றி காலியாக உள்ளன. வீட்டுமனைகள் வசிப்பிடத்திலிருந்து துாரமாக உள்ளன. பொருளாதார நிலைமை சரியில்லாததால் வீடுகள் கட்ட முடியவில்லை. பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து பயனின்றி காலியாக உள்ள இலவச வீட்டுமனைகளை மாவட்டந்தோறும் அடையாளம் காண வேண்டும். அவற்றை தகுதியான பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.13 க்கு ஒத்திவைத்தது.