யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில் யூகலிப்டஸ் மரங்களால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அகற்ற நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.முடுக்கூரணி கணபதி தாக்கல் செய்த பொதுநல மனு:முடுக்கூரணியில் ஒரு குத்தகை நிலத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் வெப்பத்தினால் அருகில் எங்கள் நிலத்திலுள்ள பயிர்கள் கருகிவிடுகின்றன. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுகிறது. அம்மர இலைகள் உதிர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. தண்ணீரின் நிறம் சாயக் கழிவுபோல் மாறுகிறது. நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது.அந்த தண்ணீரை பருகும் கால்நடைகளுக்கு நோய் பரவுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டருக்கு மனு அனுப்பினோம். அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு கலெக்டர், வேளாண் இணை இயக்குனர் பிப்.21 ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.