அரசு மருத்துவமனைகளில்மருந்து கிடங்குகளை மேம்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : தென்மாவட்ட அரசு மருத்துவமனை மருந்து கிடங்குகளை மேம்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் மருந்து கிடங்குகளுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு முறையான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அங்கிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அங்குள்ள மருந்து கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு போதிய இடம், காற்றோட்டம், குளிர்பதன வசதி இல்லை.மருந்துகள் இருப்பு, வினியோகம் விபரங்களை கணினி முறையில் பதிவு செய்வதில்லை. இதனால் பிற உபமருந்து கிடங்குகளுக்கு வினியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு முதல் மருந்தகங்கள் (பார்மசி) வரை ஒவ்வொரு மருந்தின் தன்மைக்கேற்ப குளிரூட்டப்பட்ட தட்பவெப்பநிலையில் பாதுகாக்க வேண்டியது கட்டாயம். அவ்வாறு செய்ய முடியாத நிலையில் மருந்துகளின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது.வீரியம் குறைந்த மருந்து, மாத்திரைகளை நோயாளிகள் உட்கொள்ள நேர்ந்தால் நோயின் தன்மை அதிகரிக்கும். நோயாளிகள் குணமடைய தாமதம் ஏற்படும்.விதிமுறைகள்படி மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளிலுள்ள மருந்து கிடங்குகளில் கூடுதல் இட வசதி செய்து ஏ.சி.,கணினியுடன் மேம்படுத்த வேண்டும்.ஏழு துணை மருந்து கிடங்கு, 11 மருந்தகங்களை விதிகள்படி ஏ.சி.,வசதியுடன் நவீனப்படுத்தக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.21 க்கு ஒத்திவைத்தது.