உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதுகலை படிப்பை முடிக்கும் வரை டாக்டர்கள் பணியில் சேர கால நீட்டிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை படிப்பை முடிக்கும் வரை டாக்டர்கள் பணியில் சேர கால நீட்டிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை எம்.பி.பி.எஸ்., முடித்து டாக்டர் பணிக்கு தேர்வானவர்களில் 11 பேர் முதுகலை படிப்பை முடிக்கும் வரை பணியில் சேர கால நீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உதவி (பொது) அறுவைச்சிகிச்சை டாக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப 2024 மார்ச் 15 ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. எம்.பி.பி.எஸ்., முடித்த ஆனந்தி உட்பட 11 பேர் விண்ணப்பித்தனர். தற்போது பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கின்றனர். அவர்களை பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் செய்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் பிப். 25ல் உத்தரவுகளை வழங்கினார்.நியமன உத்தரவு கிடைத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பணியில் சேரத் தவறினால், ஆர்வம் செலுத்தவில்லை எனக் கருதி, மறு அறிவிப்பு இன்றி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.ஆனந்தி உட்பட 11 பேர், 'மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையால் நாடு முழுவதும் கல்லுாரிகளுக்கான ஒதுக்கீடு தாமதமானது. 2022 ல் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங் நடந்தது.நாங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திலுள்ள பல மருத்துவக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. படிப்பை பாதியில் கைவிட மாட்டோம் என உத்தரவாத பத்திரம் அளித்துள்ளோம்.படிப்பை முடித்ததும் பணியில் சேரும் வகையில் கால நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி பட்டு தேவானந்த்: சிறப்பு சூழ்நிலையாக மனுதாரர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு கோரிக்கையை மாநில அரசு பரிசீலித்திருக்க வேண்டும். முதுகலை படிப்பை முடிக்க அனுமதித்தால், அது சுகாதாரத்துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.அவர்கள் சிறப்பு டாக்டர்களாக பங்களிக்க முடியும். சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இம்மனுதாரர்கள் கடும் போட்டியை சந்தித்து முதுகலை படிப்பு படிக்கின்றனர். பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு டாக்டர்களை மாநிலத்தில் உருவாக்க வேண்டும்.மனுதாரர்கள் முதுகலை படிப்புகளை சில மாதங்களில் நிறைவு செய்ய உள்ளனர். இதை கருத்தில் கொண்டு பணியில் சேர்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி