தியாகி மனைவிக்கு பட்டா: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை ரங்கநாயகி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:எனது கணவர் நாராயணன் அய்யங்கார். சுதந்திரப் போராட்ட வீரர். அவர் 1981ல் இறந்தார். தியாகிகளின் குடும்பத்தினருக்கு மஞ்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீகுபட்டியில் வீட்டுமனைக்குரிய அனுபந்தம் பட்டாவை தமிழக அரசு 2012 ல் வழங்கியது.அதில் பசுமை வீடு திட்டத்தின்படி வீடு கட்டியுள்ளோம். தோராய பட்டா கோரி மதுரை வடக்கு தாசில்தாரிடம் 2023 ல் மனு அளித்தேன். அவர் 2 ஆண்டுகளுக்கு பின், 'நிலத்தில் எந்த வீடும் கட்டப்படவில்லை. குடிசைதான் உள்ளது. வீடு கட்டிய பின்னரே தோராய பட்டா வழங்கப்படும்' என ஜன.10ல் உத்தரவிட்டார். இது சட்டவிரோதம். அதை ரத்து செய்து தோராய பட்டா வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.பி.பாலாஜி, 'தாசில்தாரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 48 மணி நேரத்திற்குள் பட்டா வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.