பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறு வாழ்வு திட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : பட்டாசு ஆலை விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு விதவை ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்ட மறுவாழ்விற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் 2014 டிச.2ல் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சமுத்திரவள்ளி உள்ளிட்ட 4 பேர்,'தங்களுக்கு போதிய இழப்பீடு, அரசுத்துறையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மனுதாரர்களுக்கு ஏற்கனவே தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதம் தலா ரூ.9 லட்சத்தை தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை செயலர், கலெக்டர் வழங்க வேண்டும்.தமிழக அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் வெடிபொருள் சட்டம், விதிகளின்படி பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதில் உரிமம், பாதுகாப்பிற்குரிய பணியாளர்களை கட்டாயமாக நியமித்தல், அவ்வப்போது ஆய்வுகள், பாதுகாப்பு பயிற்சி அடங்கும்.வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட தீ விபத்துகளை தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போதிய தொழில்நுட்ப அனுபவம் பெற்ற அலுவலர்களால் விசாரிக்கப்படுவதை டி.ஜி.பி.,உறுதி செய்ய வேண்டும்.இத்தகைய துயரங்களின் நீண்டகால பிரச்னையை நிவர்த்தி செய்ய பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு விதவை ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, வீட்டுவசதி உள்ளிட்ட மறுவாழ்விற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கலாம். எதிர்கால துயரங்களை தடுக்க, இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் கண்ணியம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடவடிக்கையை துவங்கும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.