பாலியல் வழக்குகளில் குண்டாஸ் கைது எவ்வளவு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை : பாலியல் வழக்குகளில் குண்டர் சட்ட தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. போக்சோ வழக்கில் தொடர்புடைய தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பித்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி உமாமகேஸ்வரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் மீதான போக்சோ வழக்கை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் செப்., 23 க்குள் விசாரித்து முடிக்க வேண்டும். பாலியல் வழக்கில் ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் குறித்த காலவரம்பிற்குள் சாட்சியம் பெற விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா என மதுரை தென் மண்டல மற்றும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.,கள் தெளிவுபடுத்த வேண்டும். பாலியல் வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், குண்டர் சட்ட தடுப்புக் காவல் காலகட்டம் முடிவடையும் வரை சாட்சியம் பெறப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிப்பதற்கான நோக்கம் சிதைகிறது. பாலியல் குற்றச்சாட்டுகளில் குண்டர் சட்ட தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவ்வழக்குகளில் விசாரணையின் தற்போதைய நிலை, தாமதத்திற்கான காரணம் தொடர்பான விபரங்களை ஐ.ஜி.,க்கள் செப்.25 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.