பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதிக்க வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்க தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பட்டர் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுள்ள பஞ்சலிங்கங்கள் (ஐந்து லிங்கங்கள்) புராண சிறப்பு மிக்கது. கொரோனா காலகட்டத்தில் பஞ்சலிங்க அறை மூடப்பட்டது. கொரோனா காலகட்டம் முடிந்த பின்னரும் தற்போதுவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. பஞ்சலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறவில்லை. பஞ்சலிங்க அறையைத் திறந்து பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். ஆகம விதிகள்படி அபிஷேகம், பிற பூஜைகளை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பு வழக்கறிஞர் முத்துகீதையன்: கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளபோது பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. பஞ்சலிங்கத்திற்கு நித்ய பூஜைகள் கிடையாது. தினமும் காலை, மாலையில் திருவிளக்கு மட்டுமே ஏற்றி வைக்கப்படுகிறது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி: திருப்பதி, ஸ்ரீரங்கம் கோயில்களில் குறுகலான பாதைதான் உள்ளது. அதிக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருச்செந்துார் கோயிலில் மட்டும் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் அறநிலையத்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,22 க்கு ஒத்திவைத்தனர்.