திருப்பரங்குன்றத்தில் பிப்.,4ல் திரளும் ஹிந்து அமைப்பினர்: விடுமுறை போலீசார் பணிக்கு திரும்ப உத்தரவு
மதுரை; மதுரை திருப்பரங்குன்றம் மலையையும், அதன் புனிதத்தையும் காக்க பிப்.4ல் அறப்போராட்டம் என்ற பெயரில் ஹிந்து அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் விடுமுறையில் உள்ள நகர் போலீசார் நாளை பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை.அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மலையை காக்க பிப்.,4ல் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழகம் முழுவதுமுள்ள ஹிந்து அமைப்பினர் பங்கேற்கின்றனர்.இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட மருத்துவ விடுமுறை, நீண்டநாள் விடுமுறையில் இருக்கும் போலீசார் நாளை மாலைக்குள் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.
சமணர் குகையில் பச்சை பெயின்டை அகற்றும் பணி
திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகபுகார் எழுந்தது.இதை உறுதிசெய்யும் வகையில்மலை மீதுள்ள சமணர் குகைகளைஆக்கிரமிக்கும் நோக்கில் பச்சை பெயின்ட் அடித்ததும், சில வாக்கியங்கள் எழுதியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை புகாரில் 'மர்மநபர்கள்' மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், சமணர் குகைகளில் அடிக்கப்பட்ட பச்சை பெயின்ட்டை தொல்லியல் துறைஉதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர்தலைமையிலான குழுவினர் பழமை மாறாமல் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இடங்களை வேலி அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.