வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைத்த பின் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
மதுரை : '2018 பிப்ரவரியில் தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக சீரமைத்த பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்,' என, ஹிந்து ஆலயப்பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. மாநிலத்தலைவர் தெய்வ பிரகாஷ், பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்புச் செயலாளர் கிருஷ்ணராஜ் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மகா ஸ்ரீயுக்தேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக புனரமைத்து, கோயில் திருப்பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த பின்னரே, தேதி அறிவித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி, கோயில் வளாக கடைகளை அறநிலையத்துறை அப்புறப்படுத்த வேண்டும். ராமேஸ்வரம், பழநி, திருச்செந்துார் கோயில்களில் மூச்சுத் திணறலால் இறந்த பக்தர்களின் இறப்புக்கு அறநிலையத்துறை பொறுப்பேற்று தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கோயில் இடங்களை கோயில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களுக்கும் சொந்தமான 100 ஆண்டுகால சொத்துப் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து கோயிலில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கோயில் கோபுரம், மண்டபம், தெப்பக்குளம், தேர் நிலையம் போன்றவற்றை மறைக்கும் எவ்வித கட்டுமானத்தையும் அறநிலையத்துறை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.