இறைச்சி கலப்படத்தை கண்காணியுங்க ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை
மதுரை: ஆடு, கோழி இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சியை வாங்கித் தான் ஓட்டல்களில் சமைக்கிறோம். எனவே உணவுப்பாதுகாப்புத்துறையினர் இறைச்சி கடைகளில் கலப்படம் நடப்பதை கண்காணிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.துறையின் சங்கத் தலைவர் குமார், மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் ஹரிஹரசுதன், பொருளாளர் செந்தில் ஆகியோர் மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜை சந்தித்தனர். இதுகுறித்து குமார் கூறியதாவது: ஓட்டல்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து காலாவதி உணவுப்பொருட்களையும் சமைத்த இறைச்சி உணவுகளையும் பறிமுதல் செய்கின்றனர். ஆடு, கோழி இறைச்சி கடைகளில் இருந்து 'பிரஷ்' ஆன இறைச்சி என்று நம்பியே தரமான உணவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் அழுகிய அல்லது கெட்டுப்போன இறைச்சியை சேர்த்து கொடுத்தால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். எனவே இறைச்சி கடைகளை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.