இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பது பதவி உயர்வை எதிர்பார்த்திருக்கும் கிரேடு 2 நர்ஸ்கள்
மதுரை : அரசு மருத்துவமனைகளில் 'ஸ்டாப் நர்ஸ்' ஆக சேருபவர்கள் பணி ஓய்வு பெறும் வரை ஒருமுறை கூட பதவி உயர்வு பெறாத அவலம் தமிழகத்தில் உள்ளது.மூன்றாண்டு கால டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங் முடித்தவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 'ஸ்டாப் நர்ஸ்' ஆக பணி நியமனம் பெற்றனர்.தற்போது மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நர்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் 7000 பேர் பணியில் உள்ள நிலையில் 'கிரேடு 1' பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்கின்றனர் 'கிரேடு 2' நிலையில் உள்ள மேட்ரன்கள்.அவர்கள் கூறியதாவது: நர்ஸ் ஆக சேர்ந்து 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் 'நர்சிங் சூப்பிரண்ட்' ஆக 'கிரேடு 2' பதவி உயர்வு பெற வேண்டும்.அடுத்தது 'கிரேடு 1' நிலை தான் உயர்வானது. பெரும்பாலான நர்ஸ்கள் 20 ஆண்டுகளை கடந்த நிலையிலும் 'கிரேடு 2' பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். 'கிரேடு 2' நிலையில் பத்தாண்டுகளாக வேலை செய்யும் 'மேட்ரன்கள்' பணி ஓய்வு பெறும் வரை 'கிரேடு 1' பதவி உயர்வு பெற முடியவில்லை.நிறைய பேர் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றனர். பணி ஓய்வுக்குள் பதவி உயர்வு கிடைக்காதா என்ற ஆசையில் 100 பேர் காத்திருக்கின்றனர். பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருப்பதால் அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் வேதனையில் உள்ளனர். வருவாய்த்துறையைப் போல குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு என்ற நிலையை எங்களுக்கும் கொண்டு வரவேண்டும் என்றனர்.