| ADDED : அக் 07, 2024 05:37 AM
மதுரை: 'பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். தி.மு.க., அரசின் செயல்பாடு, மாநகராட்சி சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரை நகர் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செயலாளர் செல்லுார் ராஜூ தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. போதைக் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க., அரசு ஒரு திட்டத்தை கூட உருப்படியாக நிறைவேற்றவில்லை. போலீசை பார்த்து திருடன் பயந்த காலம் மாறி திருடனை பார்த்து போலீசார் பயப்படும் அளவுக்கு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. அதற்கு சரியான சவுக்கடியாக நடக்கவுள்ள போராட்டம் இருக்க வேண்டும் என்றார்.திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:அண்ணாவால் வளர்ந்த கட்சி, எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று உதயநிதியிடம் சென்றுள்ளது. கலர் கலராக வண்ணம் தீட்டிய ரயில்களை இயக்கி மக்களிடம் பணம் சுரண்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. தி.மு.க.வினர் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்து எங்கு வைப்பது என தெரியாமல் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது குறித்து அமைச்சர் தியாகராஜன் பேசிய ஆடியோ உள்ளது. பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வர்.வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும். பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.மகளிர் அணி செயலாளர் வளர்மதி, நிர்வாகிகள் ராஜா, குமார், முத்துகிருஷ்ணன், கலைச்செல்வம் பங்கேற்றனர்.