பிஎச்.டி., தேர்வு எழுதியோருக்கு நேர்காணல் நடக்கவில்லை; மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள் பாதிப்பு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பி.எச்டி., நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டாகியும் நேர்காணல் நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கும் சிறப்புக் குழுவும் முடங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் 2024 மே முதல் காலியாக உள்ளது. பதிவாளர் உட்பட அனைத்து உயர்பதவிகளிலும் பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலையை வழிநடத்தும் கன்வீனராக கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இப்பல்கலையில் 2024 செப். 22ல் நடந்த பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைத் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் சிலரிடம் பல்கலை அலுவலர்கள் பணம் பெற்றதாக பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பில் அப்போதைய அரசு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தக்கருக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி இப்பல்கலை பயோடெக்னாலஜி புலத்தலைவர் கணேசன் தலைமையில் குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அது முழுமையாக இல்லை என சர்ச்சையானது. இதற்கிடையே நுழைவுத் தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் முறைகேடு புகார் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டாகியும் இதுவரை நேர்காணல் நடத்தவில்லை. சிறப்பு குழு அமைப்பு இதற்கிடையே பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு உட்பட பல்கலை ஆராய்ச்சி துறையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க கன்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனன் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கண்ணன், புஷ்பராஜ் கொண்ட சிறப்பு குழுவை கன்வீனர் சுந்தரவள்ளி நியமித்தார். இந்த சிறப்புக் குழுவில் இடம் பெற்றவர்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விசாரணை நடக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இக்குழுவை கண்காணித்து அறிக்கை பெற்று கன்வீனருக்கு சமர்ப்பிக்க வேண்டிய பதிவாளரும் அதை கண்டுகொள்ளவில்லை. கன்வீனரும் மவுனம் காக்கிறார். இம்முறைகேடு புகார் விசாரணையை முடிந்தவரை காலம் கடத்தும் எண்ணத்தில் சிலர் உள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கவனிக்குமா உயர்கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: இதுவரை நேர்காணல் நடத்தாததால் நேர்மையாக படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஓராண்டு வீணாகிவிட்டது. இதற்கு பல்கலை அதிகாரிகளே காரணம். இப்பல்கலையில் என்ன பிரச்னை நடந்தாலும் கன்வீனரும் கண்டுகொள்வதில்லை. அவருக்கு உரிய தகவல்களை பல்கலை சார்பில் தெரிவிப்பதில்லை. இதனால் மாணவர்கள் சார்ந்த பல புகார்கள் கிடப்பில் உள்ளன. உயர்கல்வி அதிகாரிகள் இப்பல்கலை செயல்பாடுகள் மீது சிறப்பு கவனம் மேற்கொள்ள வேண்டும். பிஎச்.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்காணல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.