| ADDED : ஜன 28, 2024 01:56 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்கியதில் முறைகேடு செய்ததாக கூறி, பெண் ஊழியரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அம்மன், சுவாமியை தரிசனம் செய்ய தலா, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் குழுவாக வந்த பக்தர்கள் டிக்கெட் எடுத்துக் கொண்டு தரிசனத்திற்கு சென்றனர்.அம்மன் சன்னிதி அருகில் கோவில் ஊழியர், டிக்கெட்டை எண்ணிய போது பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லாமல் டிக்கெட் குறைவாக இருந்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள், டிக்கெட் வழங்கிய பெண் ஊழியரிடம் சென்று 'ஆட்கள் எண்ணிக்கைக்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு, அதற்குரிய டிக்கெட் தராமல் குறைத்து தந்தது ஏன்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரணையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதோ அல்லது குழுவாக வந்தாலோ ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் பெற்றுக் கொண்டு டிக்கெட்டுகளை குறைவாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.சன்னிதி அருகே டிக்கெட்டை ஆய்வு செய்ய வேண்டிய ஊழியர், 'சரியாக இருக்கும்' என கருதி அப்படியே அனுமதிப்பதும் தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட பெண், உடனடியாக வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது.