எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்காக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுவதா; கிருஷ்ணசாமி கண்டனம்
மதுரை : திருப்புவனத்தில் போலீசார் தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த வழக்கை எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்காக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுவதுஏற்றுக் கொள்ள முடியாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.அவர் மதுரையில் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.கடந்த ஆண்டு மார்ச்சில் சங்கரன்கோயிலிலும் இதுபோன்று முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டும் தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது திருப்புவனம் வழக்கும் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்காக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக காவல்துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட இல்லையா?நாட்டின் முன்மாதிரி மாநிலமாக திகழும் தமிழகத்தில் மட்டும் ஏன் போலீஸ் ஸ்டேஷன் சித்ரவதை தொடர்ந்து நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்சி செய்கிறார். அதிகாரிகள் தான் ஆட்சியாளர்களாக திகழ்கின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் விதிமீறல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.