| ADDED : மே 30, 2024 03:48 AM
மாநகராட்சி பகுதியில்சேரும் கழிவுநீரை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க 7 இடங்களில் பம்ப்பிங் ஸ்டேஷன்கள் (கழிவுநீரேற்று நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. கழிவுநீரை கொண்டு செல்ல 46 தனியார் வாகனங்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.ஒப்பந்த வாகனம் ஒன்று நேற்று காலை குடியிருப்புகள், பொது இடங்களில் சேகரித்த கழிவு நீரை, மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதியில் செல்லும் மழை நீர்க் கால்வாய்க்குள் மறைவான இடத்தில் சென்று கொட்டியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு வண்டி எண்ணுடன் புகார் அளிக்கப்பட்டது.மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரிச்சர்டுபால் அளித்த புகாரின் பேரில் விதிமீறலில் ஈடுபட்ட வைகை செப்டிக் டேங்க் நிறுவனம் மீது மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேண்டாம் 'சமரசம்'
மாநகராட்சி உரிமம் பெற்ற தனியார் வாகனங்கள் முறையான ஆவணங்களுடன் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை கண்காணிக்கும் பணியில் மெத்தனமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுபோன்ற தவறுகளில் ஏற்கனவே ஈடுபட்டுஉள்ளது. இருப்பினும் சிலஅதிகாரிகளின் 'சமரசம்' காரணமாக கடும் நடவடிக்கை எடுப்பதில்லை. இம்முறையாவது உரிமத்தை ரத்து செய்வது,சுகாதாரக் கேடான சூழலை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.