டாக்டர், நர்ஸ்களுக்கு முகக்கவசம் மற்றவர்களும் அணிவது நல்லது
மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றுவதாக டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.நேற்று இங்கு புறநோயாளிகள் பிரிவில் 36 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 36 பேர் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பெரியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் என்பதால் அந்தந்த வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் தனிமை வார்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டீன் கூறுகையில்,''முதல் கட்டமாக புறநோயாளிகள் பிரிவில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், பிற பணியாளர்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளோம். மற்ற டாக்டர்கள், பணியாளர்களும் முகக்கவசம் அணியும் வகையில் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலம் தொற்று பரவுவதால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மற்றவர்கள் நலனை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது நல்லது'' என்றார்.சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி நேற்று 18 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். டெங்கு, கொரோனா தொற்று பதிவாகவில்லை. மதுரை விமான நிலையத்தில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை காய்ச்சலுக்கான பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது. 14 மொபைல் மெடிக்கல் யூனிட்கள் உள்ளதால் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்தால் காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.