கிரானைட் குவாரி வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
மதுரை:மதுரை மாவட்டம் மேலுார் அருகே, சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனம், அதன் இயக்குநர்களாக இருந்த நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி மீது, 2012ல் கீழவளவு போலீசார் வழக்கு பதிந்தனர்.பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்கு பதிந்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனுவை, மதுரை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு செய்தார்.இதை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு நேற்று விசாரித்தது.''மனுதாரருக்கு எதிராக எந்த முகாந்திரம் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது என்பதற்கான விளக்கம் இல்லை. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.நீதிபதி ஆர்.பூர்ணிமா கூறுகையில், ''மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. இச்சீராய்வு மனுவில் எந்த தகுதியும் இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.