மீன்பிடி தளமாக மாறிய கடச்சனேந்தல் கண்மாய் தடைபடுகிறது மழைநீர் வரத்து
மதுரை: தொடர் மழையால் மதுரை கடச்சனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. துார்வாராத வரத்துக் கால்வாயால் தண்ணீர் குடியிருப்புக்குள் செல்கிறது. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. வறண்டு இருந்த கடச்சனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அலங்காநல்லுார் பகுதியில் பெய்யும் மழை நீர், வரத்துக் கால்வாய் மூலம் இக்கண்மாய்க்கு செல்கிறது. இந்நிலையில் வரத்துக் கால்வாய்களும், கண்மாயும் முழுவதுமாக மரம், செடி, கொடிகளால் சூழ்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அவற்றை துார்வாராத நிலையில் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. தடுப்பணைகளை மீன்பிடி தளமாக அப்பகுதியினர் மாற்றி வருகின்றனர். கடச்சனேந்தல் பகுதியில் உள்ள சிறிய தடுப்பணைகளில் முழுவதுமாக மீன்வலையை விரித்து ஆபத்தான முறையில் மீன்களை பிடிக்கின்றனர். கண்மாயின் வரத்து கால்வாய் பாலத்தில் வலையை கட்டி துாண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். கடந்தாண்டு மீன்பிடிக்க கண்மாய் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே புதர்மண்டி தண்ணீர் வெளியேறும் நிலையில், மீன்பிடிப்பவர்களாலும் தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்கிறது. எனவே கண்மாய், கால்வாய்களை துார்வார நீர்வளத்துறை நடவடிக்கை எடுப்பதுடன் மீன் பிடிப்போரால் தண்ணீர் வரத்து தடைபடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.