தொடர் மழைக்கும் தண்ணீர் வரத்து இல்லாத கண்மாய்கள்: திசைமாறும் மழை நீரால் யாருக்கு பயன்
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஒரு வாரமாக தொடர் மழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால் கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளன. பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் நுாற்றுக் கணக்கான கண்மாய்கள் உள்ளன. இவற்றுக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியால் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் கால்வாய்கள் துார்ந்து போய் உள்ளன. இதனால் மழை நீர் திசைமாறிச் சென்று வீணாகிறது. கண்மாய்கள் தொடர்ந்து வறண்டு கிடப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலுகாவில் ஆறுகளோ, அணைகளோ கிடையாது. கண்மாயில் நீர் தேங்கினால் நேரடி பாசனத்திற்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும் நீர்சுரப்பு ஏற்பட்டு இறவை சாகுபடிக்கு வாய்ப்பு கிடைக்கும். நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களை பல ஆண்டுகளாக துார் வாராதது, மழை நீரைக் கொண்டு வரும் கால்வாய்களை பராமரிக்காதது போன்ற காரணங்களால் இப்பகுதியில் மழை பெய்தும் பயனில்லை. இதனால் பல கண்மாய்கள் கழிவுநீர் கேந்திரமாகவும், கரைகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகின்றன. கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள், அதில் விவசாயம் செய்வோர் சுயநலத்துடன் கண்மாய், குளங்களில் நீர் தேங்க விடாமல் நீரின் போக்கை மாற்றி விடுவது வாடிக்கையாக உள்ளது. பல இடங்களில் 20 மீட்டர் அகல கால்வாய் 2 மீட்டராகி விட்டது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து விட்டது. கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அதிகாரிகள் அதனை எட்டிக் கூட பார்ப்பதில்லை. ஆக்கிரமிப்பை அகற்றி தரும்படி பலமுறை விவசாயிகள் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. பருவமழை துவங்கி சிலநாட்களாக பேரையூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. கண்மாய், கால்வாய்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.