உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு மடிக்கணினி ஏமாற்று வேலை: உதயகுமார்

மாணவர்களுக்கு மடிக்கணினி ஏமாற்று வேலை: உதயகுமார்

சோழவந்தான்: 'நான்காண்டு ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், ஆட்சி முடியும் போது 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்பது ஏமாற்று வேலை' என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு உதயகுமார் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அன்னதானம் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசுதான் நாட்டிலேயே முதன் முதலில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.உதயநிதி விளையாட்டு துறைக்காக என்ன செய்தார். கார் ரேஸ் நடத்தினார். அதில் கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்க முடியுமா. விளம்பர வெளிச்சத்தில் உதயநிதியை வளர்ப்பதில் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார். 2011 ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் இந்தியாவிலேயே முதல் தகவல் தொழில்நுட்ப புரட்சியாக 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. நான்காண்டுகளாக இத்திட்டத்தை மூடிவிட்டு கடைசி நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை என்றார்.விழாவில் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் முனியாண்டி, மணி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ