எடையும் குறைவு; பொருட்களும் குறைவு
மேலுார்: மதுரை உட்பட பல ரேஷன் கடைகளில் பில்லுக்கு சரியான எடை போட ஒரு தராசு வைத்துள்ளனர். மற்றொரு தராசில் எடை குறைவாக பொருட்களை வழங்கி வருவதாக கார்டுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக மேலுார் அருகே உலகுபிச்சன்பட்டி ரேஷன் கடையில் முறைகேட்டை தவிர்க்க பி.ஓ.எஸ்., இயந்திரத்தையும் தராசையும் ப்ளூடூத் மூலம் இணைத்துள்ளனர். விற்பனையாளர் குறிப்பிட்ட எடையில் பொருளை தயாராக வைத்துள்ளார். கார்டுதாரர் ரேஷன் கார்டை கொடுத்ததும் ஸ்கேன் செய்யப்பட்டு தராசில் சரியான அளவுள்ள பொருளை வைத்து பில் போட்டுவிட்டு, பின்னர் கார்டுதாரர்களுக்கு மற்றொரு தராசில் குறைவாக எடை போட்டு தருகிறார் என கார்டுதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களை எடை வைத்து பார்க்கும் போது அரிசி 20 கிலோவிற்கு பதிலாக 19 கிலோவும், சீனி 2 கிலோவிற்கு பதிலாக ஒன்றரை கிலோவும், பருப்பு ஒரு கிலோவிற்கு பதிலாக 800 கிராம்தான் உள்ளது. அதிகாரிகள் பெயரளவில் ஆய்வு செய்வதால் பொருட்களின் எடை குறைவாகவே போடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். டி.எஸ்.ஓ., விவேகானந்தன் கூறுகையில், பொருட்கள் எடை குறைவாக போடுவது குறித்து விசாரிக்கப்படும்' என்றார்.