டீசல் தீர்ந்து நடுரோட்டில் நின்ற லாரியால் சேலத்தில் இரவில் விபத்து; டிரைவர் பலி
சேலம்: சேலம் மேம்பாலத்தில் டீசல் தீர்ந்து போனதால் நின்ற லாரி மீது, அடுத்தடுத்து இரு வாகனங்கள் மோதியதில், லாரி டிரைவர் பலியானார். ஒரு வேன் தீப்பற்றி எரிந்து நாசமானது. சேலத்தில் இருந்து ஓமலுார் நோக்கி, கரி மண் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, நேற்றிரவு, 10:30 மணிக்கு, மாமாங்கம் மேம்பாலத்தில் டீசல் தீர்ந்ததால் நடுவழியில் நின்றது. இதனால் டிரைவர், டீசல் வாங்கி வர சென்றார். இருள் சூழ்ந்த அப்பகுதியில் லாரி நிற்பது தெரியாமல், தாராபுரத்தில் இருந்து பெங்களூருக்கு நெய் பாட்டில் ஏற்றி வந்த, தனியார் நிறுவன லாரி, நின்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன்புறம் முழுதும் சேதமானது. ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் நெகமத்தை சேர்ந்த டிரைவர் கோபி, 25, சம்பவ இடத்தில் பலியானார். இதன் பின்னால், சேலம் வழியே, 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியருடன், பெங்களூரு நோக்கி சென்ற வேன், பயங்கரமாக மோதியது. அதில் பயணித்தவர்கள், லேசான காயங்களுடன் வேனில் இருந்து இறங்கினர். டிரைவரின் கால் மாட்டிக்கொண்டதால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மக்கள் உதவியுடன் அவரை மீட்டனர். இந்நிலையில் வேனின் டீசல் டேங்க் உடைந்து தரையில் வழிய, அதில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. துணை கமிஷனர் கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்தரா, சூரமங்கலம் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து பாதிப்பு சீரானது.