உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடமோசடி, ஊழல் புகார்களில் சிக்கும் மதுரை நிர்வாகிகள் தி.மு.க., தலைமை அப்செட்

இடமோசடி, ஊழல் புகார்களில் சிக்கும் மதுரை நிர்வாகிகள் தி.மு.க., தலைமை அப்செட்

மதுரை : இடமோசடி, ஊழல் புகார்கள் என அடுத்தடுத்து மதுரை நிர்வாகிகள் மீது குவியும் புகார்களால் தி.மு.க., தலைமை 'அப்செட்'டில் உள்ளது. இதன் எதிரொலியாக தான் மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தல், மேயர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் தலைமை நிறுத்தி வைத்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கப்படாத பிரசாரத்தை துவக்கி மக்களை சந்தித்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய அமைச்சர் மூர்த்திக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை தி.மு.க., நிர்வாகிகள் மீது அடுத்தடுத்த புகார்களால் ஆளுங்கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இவ்விவகாரம் தொகுதி மக்களிடமும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதால் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் முடிவில் தலைமை உள்ளது. இன்று மதுரை (செப்., 24) மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி , இவ்விவகாரம் குறித்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விளக்கம் கேட்கவும் வாய்ப்புள்ளது என கட்சியினர் தெரிவித்தனர். இதுகுறித்து தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் தி.மு.க., பொதுக் குழு உறுப்பினர் ஒருவர் கோவை மாவட்டத்தில் நடந்த இடமோசடியில் சிக்கியுள்ளார். பெண் கவுன்சிலர் ஒருவர் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்குவதில் ஊழல் செய்தது, விளையாட்டு அணி நிர்வாகி ஒருவர் இடச்சீட்டு என்ற பெயரில் மக்களிடம் ரூ.பல கோடி வசூலித்து மோசடி என தி.மு.க.,வினரே போஸ்டர் அடித்து ஒட்டினர். மாவட்ட நிர்வாகி ஒருவர் கோயில் விழாவிற்காக நடத்திய நன்கொடை வசூலில் முறைகேடு செய்து பணியாளர் ஒருவரை ஜாதியை சொல்லி திட்டிய புகாரில் சிக்கியுள்ளார். இதுபோல் வட்ட செயலாளர் ஒருவர் குஜராத்திலிருந்து கொண்டுவரப்பட்ட யூரியா மூடைகளை இறக்குவதில் ரவுடிகளை வைத்துக்கொண்டு அதிக கமிஷன் பெற்றதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையே அவரது 'எக்ஸ்' தளத்தில் பதிவு செய்திருந்தார். நகர் தி.மு.க.,வை சேர்ந்த இவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீதான புகார் தலைமைக்கு சென்றுள்ளன. இதுதவிர மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி முறைகேட்டிலும் கட்சியினர், கவுன்சிலர்கள் குறித்தும் ஒரு குழு விசாரணை நடத்தி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்புகார்களால் மதுரை 'பஞ்சாயத்து' என்றாலே தலைமை டென்ஷனாக உள்ளது. இம்மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்கள் என நிர்வாகிகள் பிரிந்து கிடக்கின்றனர். நிர்வாகிகள் தவறு செய்து கட்சி தண்டிக்கும் நிலை வந்தால் மாற்று அமைச்சர், மாவட்ட செயலாளர் என யாரையாவது பிடித்து கட்சித் தலைமையை சரிகட்டி விடுகின்றனர். அண்மையில் மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி முறைகேட்டில் மண்டலம் 3ல் அதிக தவறுகள் நடந்துள்ளது வெளியாகியும் அதற்கேற்ப நடவடிக்கைகள் இல்லை. மாறாக வரிமுறைகேடு புகாரில் சிக்காத சில மண்டல தலைவர்கள் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்துள்ளனர். இன்று மதுரை வரும் துணைமுதல்வர் உதயநிதி இதுகுறித்து விசாரித்து கட்சி செயல்பாட்டை முடுக்கிவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !