| ADDED : ஆக 02, 2011 01:21 AM
திருவேடகம் : மாணவர்களுக்கு மனிதநேயத்துடன் கூடிய கல்வியை போதிப்பதில் ஆசிரியர்கள் கடமை உணர்வுடன் செயல்படவேண்டும், என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசினார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய தரக்கட்டுபாடு குழுநிதியுதவியுடன் ''தேசியளவிலான உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்'' குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று துவங்கியது. கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைமுதல்வர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் பரமானந்த மகராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கினார். ஐ.ஒ.ஏ.சி., துறைதலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.
இதில் கலந்துகொண்ட காந்திகிராம பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், ''கல்வியை மட்டும் போதிப்பதில் மாணவர்கள் முன்னேற்றம் காணமுடியாது. உயர் கல்வியை பெற ஒழுக்கம், பண்பு, மனிதநேயத்துடன் கூடிய கல்வியை போதிப்பதில் ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். அதற்காக ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்து மாணவர்களின் தரத்தை உயர்த்த பாடுபடவேண்டும்'' என்றார். பெங்களூரு எஸ்வியாஸா பல்கலை துணைவேந்தர் சுப்பிரமணியம், ''மாணவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும்'' என்றார். இக்கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரை முதல் பிரதியை செயலாளர் பரமானந்தமகராஜ் துணைவேந்தர் ராமசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் கார்த்திகேயன், ராஜா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பேராசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.