மதுரை தி.மு.க.,வின் மூத்த பெண் நிர்வாகிக்கு மிரட்டல்; துணைமேயர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மதுரை : மதுரையில் மூத்த தி.மு.க., பெண் நிர்வாகி வசந்தாவுக்கு 62, மிரட்டல் விடுத்ததாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணைமேயர் நாகராஜன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா. தி.மு.க., மூத்த நிர்வாகி. இவரது மகன் முருகானந்தம். அப்பகுதியில் சலுான் வைத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் வீட்டை அடமானமாக வைத்த வசந்தா ரூ. 10 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து மேலும் ரூ.15 லட்சம் கொடுத்து அந்த வீட்டை குமார் கிரையமாக எழுதித்தரும்படி கேட்டுள்ளார். வசந்தா தரமறுத்தார்.இதனால் குமார் தலைமையில் முத்துசாமி, கணேசன் உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன் வசந்தா வீட்டுக்குள் நுழைத்து அவரது மகனை தாக்கியுள்ளனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கில் குமாருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி துணை மேயர், அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோரும் வசந்தாவை மிரட்டினர். துணைமேயர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. இதற்கிடையே வசந்தா குடும்பத்தினரை துணைமேயர் மிரட்டியது, எச்சில் துப்புவது போன்ற வீடியோ வெளியானது.இதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் வசந்தா தாக்கல் செய்த மனு அடிப்படையில் துணைமேயர், ராஜேந்திரன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.