உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் குழு: கவர்னருக்கு அனுப்புவதில் இழுத்தடிப்பு

மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் குழு: கவர்னருக்கு அனுப்புவதில் இழுத்தடிப்பு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் ஏற்படுத்தப்பட்ட இரு நபர் கன்வீனர் குழுவிற்கு கவர்னர் ஒப்புதல் பெற ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளன. துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலையை வழிநடத்த கல்லுாரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 4 நபர் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் வாசுதேவன் பதவிக்காலம் முடிவுற்றது. மற்றொரு உறுப்பினரான தவமணி கிறிஸ்டோபர் மீது வழக்கு இருந்ததால் அவர் நீக்கப்பட்டார்.இதையடுத்து கன்வீனர் குழு, 2 நபர் குழுவாக மாறியது. நவ.,25 ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி முடிந்த, நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் 'கன்வீனர் குழுவில் கவர்னர் பிரதிநிதி உறுப்பினர் இடம் பெறவில்லை; இது மரபு மீறல்' என குற்றச்சாட்டு எழுந்தது.அதேநேரம் கன்வீனர் குழுவில் தன்னை சேர்க்க வேண்டும் எனக்கோரி கவர்னர் பிரதிநிதி உறுப்பினரான தீனதயாளன் நவ.,25ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் கடிதம் அளித்து தீர்மானமாக கொண்டுவந்தார். ஆனால் அந்த தீர்மானம் விவாதமின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2 நபர் கன்வீனர் குழு இதுவரை கவர்னர் ஒப்புதல் பெறவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு காரணம் சிண்டிகேட் ஒப்புதல் கூட்டத் தீர்மானத்தை (அப்ரூவ்டு மினிட்) கவர்னர் ரவிக்கு அனுப்புவதில் பல்கலை தாமதப்படுத்துகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: சிண்டிகேட் கூட்டம் முடிந்தால் அதில் பேசப்பட்ட விபரம் குறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பி (டிராப்ட் மினிட்) ஒப்புதல் பெறப்படும். உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து விட்டால் அதை ஆய்வு செய்து (அப்ரூவ்டு மினிட்) கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே ஆகும்.ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை 'அப்ரூவ்டு மினிட்'டை கவர்னருக்கு அனுப்பாமல் பல்கலை இழுத்தடிக்கிறது. கவர்னருக்கு அதை அனுப்பி வைத்தால் தற்போதுள்ள கன்வீனர் குழுவை அவர் மாற்றம் செய்து தன்னுடைய பிரதிநிதியை சேர்த்து உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் அது நடந்துவிடக் கூடாது. 'சிங்கிள்' உறுப்பினர் இடம் பெற்ற குழுவே போதும் என பல்கலை நிர்வாகத்தின் எண்ணமாக உள்ளது. இதுமுற்றிலும் மரபு மீறிய செயல். கவர்னர் பிரதிநிதி உட்பட 2 உறுப்பினர்களை குழுவில் சேர்க்க வேண்டும் என்றனர்.பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிண்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது தொடர்பான 'அப்ரூவ்டு மினிட்' தயாரிப்பில் தாமதமாகிறது. ஓரிரு நாட்களில் பெற்று கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை