உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்அழுத்த மின் கம்பி பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதித்தது எப்படி?ஐகோர்ட் கிளை கேள்வி

உயர்அழுத்த மின் கம்பி பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதித்தது எப்படி?ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை : உயர் அழுத்த மின்கம்பிகள் செல்லும் பகுதியில் வீடுகள் கட்ட அனுமதிக்க கூடாது என்ற விதியை தீவிரமாக அமல்படுத்த மின்வாரியம் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அப்பகுதியில் வீடுகள் கட்ட அனுமதித்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியது.பெத்தானியாபுரம் கண்மாய்கரை எழில்வீதியை சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சமையராஜா(21). சம்பவத்தன்று சமையராஜா வீட்டு மாடிக்கு சென்ற போது, உயர் அழுத்த மின்கம்பி பட்டு மின்சாரம் தாக்கி உடல் கருகியது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.மகாராஜா ஐகோர்ட்கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ''மகன் சமையராஜா மின்சாரம் தாக்கி உடல் கருகியது குறித்து கரிமேடு போலீசில் புகார் கொடுத்தேன். மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். நஷ்டஈடு வழங்க வேண்டும்,'' என கோரினார்.மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மனோகரன், முகமது சிராக் ஆஜராயினர். அரசு சிறப்பு பிளீடர் கோவிந்தன், ''மின்சாரம் தாக்கியதில் யார் மீது தவறு என தெரியாததால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார். மின்வாரிய அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் அசோகன் ஆஜராயினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''உயர் அழுத்த மின்சாரம் செல்லும் பகுதிகளில் வீடுகள் கட்ட கூடாது என விதியுள்ளது. பலர் தரைதளம் மட்டும் கட்ட அனுமதி பெற்று, மாடி கட்டுகின்றனர். எனவே விதியை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.காயமுற்றவருக்கான செலவை வீட்டு உரிமையாளர் ஏற்பதாக தெரிவிக்கப்பட்டது. விதி மீறி கட்ட அனுமதியளிக்கப்பட்டது குறித்து மின்வாரியம், மாநகராட்சியினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை