மதுரை:மதுரையில் தேர்தல் முன்விரோதத்தால் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் மீது
கார்களை ஏற்றி கொலை செய்து விபத்து என மறைத்த வழக்கில், தி.மு.க., தலைமை
செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் கைது
செய்தனர். மதுரை அவனியாபுரம் பெரியார் நகர் ஈச்சனோடை அருகே 2009ல்
ஏப்.,16ல் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது. விசாரணையில், வில்லாபுரம்
அண்ணாநகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (33) என
தெரிந்தது. வி.ஏ.ஓ., புகார்படி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக
அவனியாபுரம் போலீசார் பதிவு செய்தனர்.எஸ்ஸார் கோபி தொடர்பு: பாண்டியராஜனை கொலை செய்ததாக மனைவி பாண்டீஸ்வரி,
தாயார் லட்சுமி ஆகியோர் போலீசாரிடம் புகார் கூறியிருந்தனர். போலீஸ்
எஸ்.பி., ஆஸ்ராகர்க் உத்தரவுப்படி, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி.,
முருகேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் தனிப்படை
போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எஸ்ஸார் கோபி, அவரது சகோரர் மருது
மற்றும் 13 பேர் சேர்ந்து பாண்டியராஜனை கொலை செய்தது தெரியவந்தது.கொலை நடந்தது எப்படி?: கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் தனது வீட்டின்
அருகில் இருந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் அலுவலகம் அமைக்க
பாண்டியராஜன் உதவினார். இந்த இடத்திற்கு எதிரே எஸ்ஸார் கோபிக்கு சொந்தமான
பழக்கடை இருந்தது.''எதிர்க்கட்சியினருக்கு இடம் கொடுத்து ஏன்?,'' என,
பாண்டியராஜனிடம், எஸ்ஸார் கோபி கேட்டுடுள்ளார். தனது விருப்பப்படி இடம்
தந்துள்ளதாக, பாண்டியராஜன் கூறினார். ''தன்னை பொது இடத்தில் மரியாதை
குறைவாக பேசி விட்டானே,'' என, எஸ்ஸார் கோபி கோபடைந்தார்.சம்பவத்தன்று
பாண்டியராஜனை தனது ஆதரவாளர்களுடன் எஸ்ஸார் கோபி அழைத்து சென்று தி.மு.க.,
அலுவலகம் மற்றும் தனது தோட்டத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த
பாண்டியராஜன் மயக்க மடைந்தார். அவரை ஈச்சனோடை அருகில் உள்ள ரோட்டில்
போட்டு விட்டு மூன்று பொலிரோ கார்களை உடலில் மாறி, மாறி ஏற்றி கொலை செய்தது
விசாரணையில் தெரியவந்தது.கூட்டாளிகள் மூவர் கைது: நில அபகரிப்பு வழக்கில்
திருச்சி மத்திய சிறையில் எஸ்ஸார் கோபி அடைக்கப்பட்டுள்ளார். அவரது
கூட்டாளிகள் அவனியாபுரம் மீனாட்சிநகரை சேர்ந்த 'ஏட்டு' செந்தில் (எ)
செந்தில்குமார் (33), டிரைவர் பாண்டி (39), அவனியாபுரம் நகராட்சி தி.மு.க.,
கவுன்சிலர் மணிகண்டன் (30) ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 120 (பி)
(கூட்டுச்சதி), 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 148 (ஆயுதங்களால் தாக்குதல்),
364 (கொலை செய்யும் நோக்கில் ஆட்களை திரட்டுதல்), 320 (கொலை), 201 (கொலையை
மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். மருது உட்பட தலைமறைவாக இருக்கும் கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.