உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் குழாய் மாற்ற ரூ.100 கோடி

குடிநீர் குழாய் மாற்ற ரூ.100 கோடி

மதுரை:மதுரையின் குடிநீர் வினியோக குழாய்களை மாற்ற 100 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் ரோடுகளை மீண்டும் துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது. மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தில், 71.20 கோடி ரூபாய் செலவில் இரண்டாம் வைகை திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 115 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. 'நபர் ஒன்றுக்கு 60 முதல் 100 லிட்டர் குடிநீர் கிடைக்கும்,' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்டம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், எதிர்பார்த்த குடிநீர் கிடைக்கவில்லை. மாநகராட்சியின் குடிநீர் குழாய்கள் பழமையாக இருப்பதால், புதிய திட்டத்திற்கு ஒத்துவரவில்லை. இவற்றை மாற்றினால் மட்டுமே, மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதற்கு, '100 கோடி ரூபாய் செலவாகும்,' என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் போதிய நிதி இல்லாததால், தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர். விரைவில், ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் கிடைப்பது மகிழ்ச்சியான தகவல் என்றாலும், இதனால் மற்றொரு பாதகமும் காத்திருக்கிறது. தற்போதைய குடிநீர் குழாய்களில் 75 சதவீதம் வரை மாற்ற உள்ளனர். இதற்காக ரோடுகளை தோண்ட வேண்டியிருக்கும். முன்பு, பாதாள சாக்கடைத்திட்டத்தில் ரோடுகள் சேதமடைந்து, மீண்டு வர பெரும்பாடு ஆனது. மறுபடியும் குடிநீர் குழாய்க்காக ரோடுகளை தோண்ட உள்ளதால், போக்குவரத்து பாதிக்கும். இணைப்பு பணிகள் முடிந்த பின், ரோடுகளை சரிசெய்யும் கட்டாயம் ஏற்படும். வழக்கம் போல, அதற்கும் மாநகராட்சியில் நிதி இருக்காது. மறுபடியும் அரசின் உதவியை பெற்று உரிய வசதியை செய்து தருவது கடினம். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பழைய குடிநீர் குழாய்களை மாற்றிவிட்டால், இரண்டாம் வைகை திட்டம் முழுமையாக பயனளிக்கும். இதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, அரசின் உதவியை நாடியுள்ளோம். இப்பணிக்கு ரோடுகள் தோண்டப்படுவது தவிர்க்க முடியாதது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை