மதுரை : போக்குவரத்து வாகன சட்டப்படி, வாகன நம்பர் பிளேட்டுகளை மாற்ற இன்னும் 2 நாட்களே உள்ளன. முறைப்படி இல்லாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பதால், இன்றே மாற்றி எழுதுவது புத்திசாலித்தனம்.போக்குவரத்து வாகன சட்டப்படி, இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட் அகலம் 200 மி.மீ., உயரம் 100 மி.மீ., இருக்க வேண்டும். இலகுரக வாகனங்களுக்கு முன்புற நம்பர் பிளேட் அகலம் 340 மி.மீ., உயரம் 240 மி.மீ இருக்க வேண்டும். பின்புறம் நம்பர் பிளேட் அகலம் 500 மி.மீ., உயரம் 120 மி.மீ., இருக்க வேண்டும். நடுத்தர, கனரக வாகனங்களுக்கு இருபுறமும் முறையே 340 மி.மீ., 200 மி.மீ., இருக்க வேண்டும். பெரும்பாலும் நம்பர் பிளேட்டுகளில் பின்பக்கம் எழுத்து 35 மி.மீ., உயரம், கனம் 7 மி.மீ., இருக்க வேண்டும். எழுத்துகளுக்கு இடையே இடைவெளி 5 மி.மீ., இருக்க வேண்டும். பெரும்பாலான டூவீலர்கள், கார்களில் பதிவெண்ணை, விதிகளை மீறி எழுதுகின்றனர். நம்பர்களை சிறிதும், பெரிதுமாக எழுதி குழப்புகின்றனர். கட்சி கொடிகள், தலைவர்களின் படங்களை வரைந்தும் மிரட்டுகின்றனர். கடந்தாண்டு செப்டம்பரில் முதன்முறையாக மதுரையில் விதிமீறிய நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், தென்மாவட்டங்களுக்கும் இது அமல்படுத்தப்பட்டு, குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் செப்.,1 முதல் முறையான நம்பர் பிளேட் உடன் தான் வாகனங்கள் இருக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளதால், இப்போதே விழித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், வாகன உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.