| ADDED : செப் 17, 2011 03:11 AM
மதுரை : விளையாட்டு சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலால் கூடைபந்து போட்டிகள் நடத்துவது குறைந்து வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திலுள்ள கூடைபந்து கோர்ட்டும் தரமின்றி உள்ளது.கூடைபந்து மாநில கழகத்தில் தற்போது உட்பூசல் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட சிலரின் நடவடிக்கைகளால் மாவட்ட கூடைபந்து சங்கங்களும் சரியாக செயல்படவில்லை. இதனால் கூடைபந்து விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். மதுரையில் மாநில, மாவட்ட சங்கங்கள் சார்பில் ஆண்டுக்கு 11 போட்டிகள் வரை ஏற்கனவே நடத்தப்பட்டன. இதனால் மாணவர்கள் அதிக பயிற்சியில் ஈடுபட முடிந்தது. இப்பயிற்சியின் மூலம் மாநில, தேசிய போட்டிகளில் மாணவர்களால் வெற்றி பெற முடிந்தது. தற்போது மாநில, மாவட்ட சங்கங்கள் சார்பில் போட்டிகள் நடத்தப்படுவது இல்லை.பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மட்டும் போட்டிகளை நடத்துகின்றன. இதனால் மாணவர்களின் பங்கேற்பும், பயிற்சி பெறுவதும் குறைந்து விட்டது. எனவே அரசு தலையிட்டு மாநில சங்க பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அடிக்கடி கூடைபந்து போட்டிகள் நடத்தவும் வழிவகை செய்ய வேண்டும்.செயற்கை புல்தரை அமையுமா: மதுரை ரேஸ்கோர்ஸ் கூடைபந்து அரங்கின் தரைப்பகுதி சரியாக அமைக்கப்படவில்லை. மழைபெய்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. தரைதளத்தை செயற்கை புல்தரையாக அமைக்க வேண்டும். இரண்டு கோர்ட்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு அணிகள் விளையாட முடியும். எனவே இங்கு 'மின்னொளி விளக்கு' அமைத்தால், மாநிலப் போட்டிகளை நடத்தலாம்.