| ADDED : செப் 22, 2011 12:30 AM
மதுரை :மதுரை மாநகராட்சி 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வாவாபகரூதீன், அரசு நிதியை பயன்படுத்தி சொத்து சேர்த்தாரா என விசாரணை நடக்கிறது.இவரது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகவும், தற்போது வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனுக்கு பெயர், முகவரி குறிப்பிடாத புகார் மனு ஒன்று தபாலில் வந்தது. இதுகுறித்து விசாரிக்குமாறு தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் மோகனுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் மாலை வாவாபகரூதீனிடம் விசாரணை நடந்தது. தான் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும், வார்டு நிதியை முறையாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.இதைதொடர்ந்து, ஒருவாரத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்த விபரம், குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அவருக்கு போலீசார் கெடு விதித்துள்ளனர்.