ரூ.7.85 கோடியில் புதுப்பிக்கப்படும் மதுரையின் முதல் தீயணைப்பு நிலையம்
மதுரை: மதுரையின் முதல் தீயணைப்பு நிலையம் என்ற பெருமை பெற்ற பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகர் தீயணைப்பு நிலையம் ரூ.7.85 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையம் 1944ல் ஆங்கிலேயர் காலத்தில் மதுரை நகரில் அமைக்கப்பட்ட முதல் தீயணைப்பு நிலையம். அக்காலத்தில் 'மதுரா பயர் ஸ்டேஷன்' என்று அழைக்கப்பட்டது. பழமையான நிலையம் என்பதற்கேற்ப ஓடுகள் வேய்ந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 3 வண்டிகள் மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளது. இதன் வளாகத்திலேயே தீயணைப்புத் துறையின் தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகமும் உள்ளது. இதனால் இடநெருக்கடியில் இந்நிலையம் தவித்து வருகிறது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியதோடு, பழமையான இக்கட்டடத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக ரூ.7.85 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிட்டதும், நிதி ஒதுக்கீடு செய்து ஓரிரு மாதங்களில் பணிகள் துவங்கும். இதற்கு முன்னேற்பாடாக துணை இயக்குநர் அலுவலகம் கே.கே.நகரில் உள்ள வாடகை கட்டடத்திற்கு இடமாறுகிறது. இதைதொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக செயல்பட பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடங்களை தீயணைப்பு அதிகாரிகள் தேட ஆரம்பித்துள்ளனர்.