மூன்று ரத்தநாள குழாய்க்கு ஒரே அறுவை சிகிச்சை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் சாதனை
மதுரை: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூன்று இடங்களில் மூளை ரத்தநாள கசிவுடன் வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது, சிவகங்கையைச் சேர்ந்த 57 வயது பெண்களுக்கு நவீன மூளை நரம்பியல் ரத்தநாள தொழில்நுட்பத்தை (எண்டோ வாஸ்குலார் காய்லிங் ஆப் அனுரிசம்) பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுதம் குஞ்சா, நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் செல்வமுத்துகுமரன் கூறியதாவது: வழக்கமாக ரத்தநாள பாதிப்பு (அழற்சி) கண்டறியப்பட்டால் திறந்தநிலை நுண் அறுவைசிகிச்சை கிளிப்பிங் வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இருவருக்கும் மூன்று இடங்களில் பாதிப்பு இருந்தது. மூளையின் ஆழமான இடங்களில் பலுான் போன்று தனியாக வீங்கியிருந்த இந்த ரத்தநாளங்களில் கிழிசல் ஏற்பட்டால் மூளைக்குள் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். ஒரே அமர்வில் மூன்று ரத்தநாள அழற்சிகளுக்கும் சிகிச்சையளிக்க முடிவு செய்து இருவருக்கும் 'எண்டோ வாஸ்குலர் காய்லிங்' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தினோம். இது உடலில் குறைவான ஊடுருவலை ஏற்படுத்தும். தொடையின் ரத்தநாளம் வழியாக சிறிய கதீட்டர்கள் அனுப்பப்பட்டு மூளையின் ரத்தநாளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பின் ரத்தநாள அழற்சி பகுதியின் உட்புறத்தில் சிறிய உலோக சுருள்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த சுருள்கள் ரத்தநாளக்குழாய் கிழிசல் ஏற்படுவதை தடுப்பதோடு அழற்சி பகுதிக்குள் ரத்தம் நுழைவதையும் தடுக்கிறது. நிகழ்நேர 3 டி 'வாஸ்குலர் இமேஜிங்' மூலம் 4 மணி நேர துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் நலமுடன் உள்ளனர். லட்சம் பேரில் 6 முதல் 10 பேருக்கு இப்பாதிப்பு உள்ளது என்றனர்.இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறைத்தலைவர் முகுந்தராஜன், நரம்பியல் அறுவைசிகிச்சை துறை முதுநிலை டாக்டர் செந்தில்குமார் உடனிருந்தனர்.