புதிய திட்டத்தில் 26 தடங்களில் மினி பஸ்
மதுரை : மதுரை மாவட்டத்தில் 26 புதிய வழித்தடங்களில் மினிபஸ்களை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.மினிபஸ் திட்டத்தின் அடுத்த கட்டமாக புதிய விரிவுபடுத்தப்பட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களே செல்லாத கிராமங்களை தேர்வு செய்து மினிபஸ்களை இயக்க விண்ணப்பிக்கலாம் என பிப்ரவரியில் அறிவிப்பு வெளியானது. மாவட்டம் முழுவதும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க 57 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. தகுதி அடிப்படையில் 54 தடங்களில் பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கொண்ட குழுவினரின் ஏற்பாட்டில் கலெக்டர் இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார்.இதையடுத்து நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த விழாவில் அனுமதி வழங்கப்பட்ட தடங்களில் முதற்கட்டமாக 26 மினிபஸ்களை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைத்தனர். மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., பகுதியில் 13 வழித்தடங்கள், தெற்கு 3, மத்தியில் 10 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயங்கும். ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.,க்கள் சித்ரா, கார்த்திகேயன், பாலமுருகன் பங்கேற்றனர்.