வியாபாரிகளுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் அமைச்சர் மூர்த்தி உறுதி
மதுரை: தமிழகத்தில் உணவுப் பொருள் வியாபாரிகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வர்த்தக உணவு பொருட்கள் கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.மதுரை தமுக்கத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் டிச.,22 ல் வர்த்தக உணவுப் பொருட்கள் கண்காட்சி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. நேற்று நடந்த நிறைவு விழாவிற்கு கண்காட்சி தலைவர் மாதவன் வரவேற்றார். உணவு பொருள் வியாபாாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், பொருளாளர் கார்த்தியேகன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., பூமிநாதன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரகாசம், சூரஜ் சுந்தர சங்கர், திருமுருகன், வினோத்கண்ணா உள்ளிட்டோர் பேசினர்.அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா போல் இந்த வர்த்தக உணவுப் பொருட்கள் கண்காட்சியை உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் நடத்தியுள்ளது. ஆண்டுதோறும் இதுபோன்று தொடர்ந்து நடத்த வேண்டும். இங்கு பல்வேறு வகையான உணவு பொருள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இயற்கை உணவுகள் மீது தற்போது மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.அதற்கேற்ப பொருட்கள் குவிந்திருந்தன. வியாபாரிகள் புதிய தொழில்களை துவங்க வேண்டும். அதற்காக வியாபாரிகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். மதுரையையொட்டி பெரிய அளவில் ஒரு நகரை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். சங்க துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள் பங்கேற்றனர்.