2026 தேர்தல் வெற்றியில் மீனாட்சி மண் முதலிடம் : அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை:தி.மு.க., 2026 தேர்தலில் வெற்றி பெறும் தொகுதியில் மீனாட்சி மண் மதுரை முதலிடத்தில் இருக்கும் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.மதுரை தி.மு.க., பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மதுரை மண் அரசியல் விழிப்புணர்வு கொண்டது. இந்த மண்ணில் எத்தனையோ மாநாடுகளை நடத்தி, எழுச்சியுற்று கட்சியை பொலிவோடும், வலுவோடும் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசு செயல்பாடு, கட்சி செயல்பாடுகளை இரு கண்களாக கொண்டு செயல்படுகிறார். தினம் பல மணிநேரம் தமிழக மக்கள் நலனுக்காகவே சிந்தித்து செயல்படுகிறார். இங்கு பங்கேற்றுள்ள துணை முதல்வர் உதயநிதியையும் வரவேற்கிறேன்.இப்பொதுக்குழு மூலம் இன்றைய அரசியல் களத்தை மதுரை மண்ணில் முதல்வர் ஆரம்பித்து வைத்துள்ளார். இது அன்னை மீனாட்சி மண். 2026 தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கும் முதலிடமாக மதுரை மாவட்டம் இருக்கும். கட்சிப் பணியாற்ற 25 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக உள்ளேன். எம்.எல்.ஏ., வாய்ப்பு, அமைச்சர் வாய்ப்பும் தந்தீர்கள். அதற்கு மேல் இந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவதற்கான வாய்ப்பும் கொடுத்தீர்கள். இதைவிட வாழ்க்கையில் எனக்கு பெரிய பெயர் எதுவும் கிடைத்து விடப்போவது இல்லை என்றார்.