உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய தவறுகள் அமைச்சர் தியாகராஜன் பேச்சு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய தவறுகள் அமைச்சர் தியாகராஜன் பேச்சு

மதுரை: மதுரையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் வந்த நிறைய திட்டங்கள் தவறாக உள்ளன என அமைச்சர் தியாகராஜன் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் மதுரையில் 'சி.ஐ.ஐ., மதுரை 2035 பார்வை' என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் 'புது மதுரை' கையேடு வெளியீட்டு விழா நடந்தது.மதுரை மண்டல தலைவர் அஸ்வின் தேசாய் வரவேற்றார். தமிழ்நாடு துணைத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார்.'புது மதுரை' லோகோ, கையேட்டை வெளியிட்டு அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் நகரமயமாதல் கொள்கையில் பின்தங்கி உள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியின் போது துவங்கப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் வந்த நிறைய திட்டங்கள் தவறாக உள்ளன. மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், எல்காட் பூங்கா கட்டடங்களை திறப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை பெறப்படவில்லை. இந்த அரசு வந்தபின் அதை திறப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சிமென்ட் பூசி கிரானைட் கற்கள் சீராக பொருத்தப்படாததால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர், வெயிலின் போது சூடு அதிகமாகவும் இருந்தது. அதை அகற்றிவிட்டு மணல் வைத்து 'பேவர்பிளாக்' கற்கள் பொருத்துவதற்கு மட்டுமே லட்சக்கணக்கில் செலவானது.மாநில அளவில் அரசிடம் நிறைய திட்டங்கள் இருந்தாலும் செயல்படுத்தும் வேகம் குறைவாக உள்ளது. மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என நிதி அமைச்சராக இருக்கும்போது ஒன்றரை ஆண்டுகளுக்குள் மாற்ற நினைத்தேன். தற்போது தான் புதிய இடமே தேர்வாகியுள்ளது என்றார்.மண்டல துணைத் தலைவர் ராஜீவ் ஜெயபாலன் நன்றி கூறினார். கருத்தரங்க அமர்வுகளில் நிர்வாகிகள் சங்கர் ஆறுமுகம், விஜயலட்சுமி, மதன்குமார், யோகேஷ், ஜெய்சின் வீர், கோடீஸ்வரன், ராஜமோகன், திருமுருகன், சுந்தர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி