உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 600க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரையில் 600க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை ஜூலை 15க்குள் அகற்ற அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொது இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.இத்துறை அதிகாரிகள் கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பி அகற்றும்படி தெரிவித்தனர். பலர் கண்டுகொள்ளாததால் அதிகாரிகளே களத்தில் இறங்கினர். மாவட்ட அளவில் புறம்போக்கு, நெடுஞ்சாலை, பேரூராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி இடங்களில் கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளன.நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 547 இடங்களில் இருந்த 946 கொடிக்கம்பங்களை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருவாய்த்துறையிலும் மதுரை வடக்கு தாலுகாவில் 29 இடங்களில் புறம்போக்கு நிலங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. உசிலம்பட்டி தாலுகாவிலும் அரசியல் கட்சியினரிடம் முறைப்படி தெரிவித்து வருவாய்த்துறை இடங்களில் அகற்றப்பட்டுவிட்டன. தவிர நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியின் சில இடங்களில் கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. ஜூலை 15 க்குள் அவற்றை அகற்ற நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் மற்ற இடங்களிலும் கொடிக்கம்பங்களை அகற்றிவிடுவோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை