தமுக்கம் எதிரே தமிழன்னைக்கு புது சிலை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணி முடிந்ததும் தமுக்கம் மைதானம் எதிரே தமிழன்னைக்கு புது சிலையை நிறுவ வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சாலை விரிவாக்கம், தமுக்கம் மைதானம் முதல் ஏ.வி., பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இச்சாலையின் தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியிலுள்ள உ.வே.சுவாமிநாத அய்யர் சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் சிலையை உலகத் தமிழ்ச்சங்கம் அருகே நீச்சல்குளம் பகுதிமாநகராட்சி படிப்பகத்திற்கு மாற்றப்படும். தமுக்கம் தமிழன்னை சிலை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், தியாகிகள் நினைவுச் சின்னம் ஸ்துாபி மாநகராட்சி அலுவலக வளாகம், நேரு சிலை மாவட்ட நீதிமன்றம் எதிரே முக்கோண வடிவ பூங்காவிற்கும் இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்தார். தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை ஓரத்தில் அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லை. அவற்றை தமிழ்ச்சங்கத்திற்கு மாற்றினால் நிகழ்ச்சிகளின்போது மட்டுமே மக்கள் பார்வையிட முடியும். இரு சிலைகளையும் அகற்ற அல்லது இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.தண்டபாணி, எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு மாற்றலாம். சாலை விரிவாக்கம், மேம்பால பணி முடிந்ததும் தமுக்கம் எதிரே புதிதாக தமிழன்னை சிலையை நிறுவ வேண்டும் என்றனர்.