மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் உண்ணாவிரத போராட்டம்
13-Nov-2024
மதுரை : தமிழகத்தில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம், அவுட்சோர்ஸிங் மூலம் ஆட்கள் நியமனம் கூடாது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து அரசு துறை ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுதவிர அந்தந்த துறைவாரியாக உள்ள சங்கங்களும் துறைரீதியான கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். துாத்துக்குடியில் டிச.13, 14 ல் நடைபெறும் மாநில மாநாட்டில் இதுகுறித்து அறிவிப்பு வர உள்ளதாக தெரிவிக்கின்றனர்.அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் டிசம்பரில் கருத்தரங்கு, 2025 ஜனவரியில் ஒருநாள் தற்செயல் விடுப்பு, ஏப்ரலில் தொடர் காத்திருப்பு போராட்டம் என அறிவித்துள்ளது.வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர், கட்சிகளின் கொடிக்கம்ப பிரச்னையில் தங்கள் மீதே துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தங்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் டிச.19 ல் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.இப்படி பலதரப்பினரும் போராட முன்வந்துள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடந்தது. இதில் மாநில தலைவர் சந்திரசேகரன், பொதுச் செயலாளர் நுார்ஜஹான், பொருளாளர் சுப்புக்காளை உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.சத்துணவுத் துறையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து அரசுத்துறை காலியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறுவோருக்கு ரூ.6750 ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமே வழங்க வேண்டும். அரசு ஊழியரைப் போல சத்துணவு ஊழியர்களுக்கும் 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம், டிச.18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், டிச.27ல் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம், 2025 ஜன.18 ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
13-Nov-2024